சமஸ்கிருதசனியன் - தேசீயத் துரோகி. குடி அரசு - கட்டுரை - 17.01.1932 

Rate this item
(0 votes)

தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம். 

சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனையாகும். 

உண்மையிலேயே “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்" என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும் இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக் கொடுமை, சடங்குக் கொள்ளை, கடவுள் முட்டாள் தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும் தலைவிரித்தாடி அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்தரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமே யாகும். இன்று வருணாச்சிரமதருமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும் சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாச்சிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப்பாஷைப்படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும். தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது: கோயிலுக் குள் செல்லக்கூடாது. குளத்தில் குளிக்கக் கூடாது. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே யாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்த சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம். பெண்களின் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்பதற்கும் திரு. சிவராஜ்.பி.ஏ... பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர். பார்ப்பன ரல்லாதார் கூடிய சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ள மறுத்ததற்கும் காரணமாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குறைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வருணாச்சிரமக் கூட்டத்தார்கள் எல் லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத. வேத. புராண, இதிகாச. ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லு கின்றனவென்று கவனிக்கின்றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லு கின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக்கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்த சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாம லிருக்க வேண்டுமானால் - அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும். 

ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப்புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச்செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும் குடி கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகள் போதாதென தேசீய ஆடைகளைப் புனைந்து “ஹிந்தி” என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஹிந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப்படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாச்சிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழய கௌரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரியாதைகாரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த ஹிந்தி பாஷை முதலானவை களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிடச் சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள். 

ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியார் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபார்சு செய்ததைக் கண்டிக்கிறார்கள். பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமா யிருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பிக்கிளப்புப் பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங்கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியின் சிபார்சைக் கைவிட்டுவிடக் கூடாதென எச்சரிக்கை செய்ய வேண்டும். சில பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கங்களிலும் சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும்படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் பல தீர்மானங்கள் செய்து அரசாங்கத்தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சமஸ் கிருதச் சனியன் ஒழியும். 

குடி அரசு - கட்டுரை - 17.01.1932

 
Read 52 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.